நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகிய 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தமது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்து இசைஞானி இளையராஜா குறித்த படத் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சட்டக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இளையராஜா தமது சட்டத்தரணி ஊடாக இந்த சட்டக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இந்திய மதிப்பில் 5 கோடி ரூபா இழப்பீடு கோரியுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் திரைப்படத்தில் 'ஒத்த ரூபாயும் தாரேன்', 'என் ஜோடி மஞ்ச குருவி', 'இளமை இதோ இதோ' ஆகிய 3 பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் படத்தில் இந்த 3 பாடல்களைப் பயன்படுத்தியதற்காக தமக்கு இழப்பீடாக இந்திய மதிப்பில் ரூபா 5 கோடியை இளையராஜா கோரியுள்ளார்.
3 பாடல்களையும் படத்தில் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் 7 நாள்களுக்குள் படக்குழுவினர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த சட்டக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.