வடக்கு மாகாணத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (சங்கு சின்னக் கூட்டணியின்) 10 வேட்புமனுக்கள் உட்பட நிராகரிக்கப்பட்ட மொத்தம் 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைமை நீதியரசர் முகமட் லபார், நீதியரசர் பிரியங்கா பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய ஆயம் இன்று இந்த உத்தரவை விடுத்தது.
முன்னர் நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்கனவே கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தமை தெரிந்ததே.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தாக்கல் செய்த 10 வேட்புமனுக்களும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தாக்கல் செய்த வேட்புமனுவும், கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சுயேச்சை குழுவும், நுவரேலியா மாவட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும், கொழும்பு மாவட்டத்தில் ஒரு சுயேச்சைக் குழுவும் உட்பட மொத்தம் 35 தரப்புக்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கின்றது.
கடந்த வாரமும், இன்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய சில வழக்குகளின் இத்தகைய உத்தரவுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் சட்டமா அதிபர் ஊடாக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யும் எனக் கூறப்பட்ட போதிலும் அது தொடர்பான செய்திகள் இன்னும் வெளியாகவில்லை.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இப்போதைய உத்தரவுப்படி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி யாழ். மாவட்டத்தில் வேலணை, வல்வெட்டித்துறை, காரைநகர், நெடுந்தீவு தவிர்ந்த ஏனைய பிரதேச சபைகளுக்கான தேர்தலில் களத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.