திருமணம்.. இன்றும் பல பெண்களுக்கும், கனவாகவே இருந்து வருகிறது. அதுபோல ஆண்களுக்கும் கூட குறிப்பாக 90s கிட்ஸ்களின் ஆண்களுக்கு பெண் கிடைக்காமல் இருப்பதாக பல மீம்ஸ்கள் உலா வருவதை நம்மால் பார்க்க முடியும்.
இப்படி முதல் திருமணமே பலருக்கும் குதிரை கொம்பாக உள்ள நிலையில் தான் ஆந்திராவில் ஒருவருக்கு அவரது 2 மனைவிகள் முன்நின்று இளம்பெண்ணை 3வதாக திருமணம் செய்துவைத்துள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், முற்றிலும் இது உண்மை. இந்த சம்பவம் எங்கு நடந்தது? கணவருக்கு அவரது 2 மனைவிகள் ஏன் முன்நின்று இளம்பெண்ணை பார்த்து 3வது திருமணம் செய்து வைத்தனர்? என்பது பற்றிய தகவல் பின்வருமாறு:
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் பெடபயலு அருகே உள்ள கின்சூரு பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டண்ணா.
இவருக்கு கடந்த 2000ல் திருமணம் ஆனது. அப்போது அவர் சாகேனி பர்வதம்மா என்பவரை கரம் பிடித்தார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ தொடங்கினர்.
ஆனாலும் கூட இந்த தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதையடுது்து பாண்டண்ணா 2வது திருமணம் செய்ய முடிவு செய்தார். இதுபற்றி மனைவி சாகேனி பர்வதம்மாவிடம் தெரிவித்தார். அவரும் கணவரின் 2வது திருமண ஆசையை நிறைவேற்ற ஓகே சொன்னார்.
இதைத்தொடர்ந்து முதல் மனைவி சாகேனி பர்வதம்மாவின் சம்மதத்துடன் பாண்டண்ணா, சாகேனி அப்பளம்மா என்பவரை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்தார்.
பாண்டண்ணா - சாகேனி அப்பளம்மா தம்பதிக்கு கடந்த 2007 ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது பண்டண்ணா - சகேனி அப்பளம்ம்மா தம்பதியின் மகனுக்கு 17 வயது ஆகிறது.
தற்போது பாண்டண்ணா, தனது முதல் மனைவி சாகேனி பர்வதம்மா, 2வது மனைவி சாகேனி அப்பளம்மா மற்றும் மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தான் பாண்டண்ணாவுக்கு இன்னொரு குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆனால் முதல் மனைவி சாகேனி பர்வதம்மா, சகோனி அப்பளம்மாவால் குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை.
இதையடுத்து பாண்டண்ணா 2வது குழந்தை பெற்றெடுக்க 3வது திருமணம் செய்ய முடிவு செய்தார். இதுபற்றி அவர் முதல் மனைவி சாகேனி பர்வதம்மா மற்றும் 2வது மனைவி சாகேனி அப்பளம்மா ஆகியோரிடம் தெரிவித்தார்.
பொதுவாக இப்படி எந்த கணவராவது கூறினால் அவருடைய மனைவி கொதித்தெழுந்துவிடுவார். ஆனால் பாண்டண்ணாவின் மனைவிகள் 2 பேரும் அப்படி எதுவும் செய்யவில்லை.
மாறாக பாண்டண்ணாவின் விருப்பத்தை கேட்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்ததோடு கணவரின் 3வது திருமண ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்தனர்.
அதுமட்டுமின்றி தங்களின் கணவர் பாண்டண்ணாவுக்கு பெண் பார்க்கும் படலத்தை அவர்கள் தொடங்கினர். இதையடுத்து உள்ளூரிலேயே வசிக்கும் இளம்பெண்ணை, பாண்டண்ணாவுக்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் பேசி முடித்தனர்.
அதன்பிறகு பாண்டண்ணா மற்றும் அந்த இளம்பெண்ணின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிக்க மனைவிகள் சாகேனி பர்வதம்மா மற்றும் சாகேனி அப்பளம்மா ஆகியோர் தடபுடலாக ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
அவர்கள் 2 பேரும் கணவரின் 3வது திருமணத்துக்கு பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கினர். அதுமட்டுமின்றி பேனரடித்து திருமண விழாவுக்கு வருவோரை வரவேற்றனர்.
இதையடுத்து இரு மனைவிகளின் முன்னிலையில் பாண்டண்ணா, இளம்பெண்ணை 3வது திருமணம் செய்தார்.
2வது குழந்தை பெற்றெடுக்க கணவர் விரும்பியதை தொடர்ந்து அவருக்கு 2 மனைவிகள் சேர்ந்து இளம்பெண்ணை 3வதாக திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.