சட்டவிரோதமாக உந்துருளியில் மதுபானம் கொண்டு சென்ற பெண்கள் இருவர் சோதனையிடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் ஒன்று கந்தகெட்டிய பகுதியில் பதிவாகியுள்ளது.
நேற்று இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்கள் சட்டவிரோதமான முறையில் உந்துருளியில் மதுபானம் கொண்டு செல்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கந்தகெட்டிய பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரால் குறித்த உந்துருளியை நிறுத்துமாறு சமிக்ஞை செய்யப்பட்டபோது சந்தேகநபர்கள் காவல்துறை கான்ஸ்டபிளை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் காயமடைந்த கான்ஸ்டபிள் கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.