கனடாப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது பதவி விலகல் தொடர்பில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் பிரதமர் பதவியிலிருந்தும் தாம் விலகப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
தேசிய அளவில் போட்டித்தன்மைமிக்க செயன்;முறை மூலம் கட்சி அதன் அடுத்த தலைவரைத் தெரிவு செய்த பின்னர் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள தான் எண்ணம் கொண்டுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மார்ச் 24ஆம் திகதி வரை நாடாளுமன்றக் கூட்டங்கள் நிறுத்திவைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜஸ்டின் ட்ரூடோ தமது பதவி விலகல் தொடர்பில் அறிவித்துள்ள நிலையில் நாளை லிபரல் கட்சியில் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஒக்டொபர் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடைபெறவுள்ள கனாவின் பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி படுதோல்வியைச் சந்திக்கும் எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில் அவரைப் பதவி விலகக் கோரி கட்சியினர் விடுத்த அழுத்தத்தினால் அவர் நெருக்கடிக்கு ஆளானார்.
முன்னதாக அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த வந்த ட்ரூடோவின் லிபரல் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி ஆதரவைத் தொடர மறுத்துள்ளதுடன் மக்களுக்கு பணியாற்றுவதில் ட்ரூடோ தோல்வியுற்றதாகவும், அவரது அரசு மீது எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும், தெரிவித்திருந்தது.
விலைவாசி உயர்வு, வீடமைப்புத் துறையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது செல்வாக்கு, சரியத் தொடங்கியது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமராகப் பதவியேற்ற ஜஸ்டின் ட்ரூடோ இரண்டு முறை தேர்தல்களில் வெற்றி பெற்றதன்; மூலம் கனடாவில் நீண்டகாலம் பிரதமர் பதவி வகித்தவர்களில் ஒருவராக பதிவாகியுள்ளார்.
53 வயதான ஜஸ்டின் ட்ரூடோ 9 வருடங்கள் அந்நாட்டின் பிரதமராகப் பதவி விகித்துள்ளதுடன் 11 வருடங்கள் லிபரல் கட்சியின் தலைவராகவும் பதவி விகித்துள்ளார்.
