யாழில், தான் செய்த ரோல்ஸினை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச் சேர்ந்த வினோத் வினிதா (வயது 28) என்ற, ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
அவரது கணவர் நேற்று முன் தினம் (18) வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது அவரது மனைவி தேநீரும் ரோல்ஸூம் கொடுத்துள்ளார். இதன்போது தேநீரை குடித்துவிட்டு ரோல்ஸினை சாப்பிட மறுத்துள்ளார்.
இந்நிலையில் அந்த ரோல்ஸினை சாப்பிடுமாறு கணவரிடம் வற்புறுத்தியுள்ளார். இதன்போது கணவர் அவரை தாக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார்.
இதன்போது குறித்த பெண் ஏற்கனவே தனது உடலில் பெற்றோலினை ஊற்றிவிட்டு இருந்துள்ளார். கணவன் வந்ததும் தனக்கு தானே தீமூட்டினார்.
இந்நிலையில் அவரை மீட்டு கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
