அரசாங்கம் மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றியுள்ளது! சாகர காரியவசம் கடும் விமர்சனம்!

 ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மக்கள் மீது பல்வேறு வரிகளைச் சுமத்திவிட்டு, புதிய வரிகள் எதையும் அறிமுகப்படுத்தவில்லை எனக் கூறுவது தவறானது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் இன்று (02.11.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் வாகனங்கள், மதுபானம், புகையிலை, வெளிநாட்டுச் சேவைகள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், ஏற்கனவே இருந்த சில வரிகள் அதிகரிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், வரிகளை அதிகரித்த போதிலும் நாட்டில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என விமர்சித்த அவர், எரிபொருள் விலை உயர்வு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஆகியவை அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சில கருத்துக்கள் குறித்தும் கேள்வி எழுப்பிய அவர், நாட்டின் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்துள்ளதாகவும், நாமல் ராஜபக்ஷ நியாயமற்ற முறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் அதற்கு இடமளிக்க மாட்டார்கள் என்றும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.

Post a Comment