திருகோணமலையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், பரீட்சைக்கு தாமதமாக வருகை தந்த 11ஆம் தர மாணவன் ஒருவர், தன்னை எச்சரித்த ஆசிரியர் மீது கடுமையான தாக்குதல் நடத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பாடசாலையில் தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகளின்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரீட்சைக்கு தாமதமாக வருகை தந்த மாணவனை, பரீட்சைக் கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் எச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் மாணவன், பரீட்சை அறைக்குள்ளேயே வைத்து ஆசிரியரின் தலையில் பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து குறித்த மாணவன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆசிரியர், திருகோணமலை மத்திய காவல் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் திருகோணமலை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மாணவனைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக விசேட காவல்துறைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவனைக் கண்டறிந்து சட்டத்திற்கு அமைவாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாடசாலை வளாகத்திற்குள், அதுவும் பரீட்சை நடைபெறும் நேரத்தில் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இச்சம்பவம் கல்விச் சமூகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்திற்கான முழுமையான காரணங்கள் மற்றும் தாக்குதல் தொடர்பான மேலதிக விபரங்கள் காவல்துறை விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
