Posts

திருகோணமலையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர் படுகொலை! வெளியாகிய அதிர்ச்சி பின்னணி

 


அண்மையில் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட தொழிலதிபர் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

தென்கொரியாவில் சுமார் எட்டு ஆண்டுகள் பணியாற்றிச் சேமித்த பணத்தில் திருகோணமலையில் சுற்றுலா விடுதியொன்றை நடத்தி வந்த 55 வயதுடைய தொழிலதிபர், அவரது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலிக்காகக் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 20ஆம் திகதி திருகோணமலை சிங்கபுர பகுதியில் இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளது.

நிமல் கொஸ்கொல்ல என்ற 55 வயதுடைய திருமணமாகாத தொழிலதிபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பிய அவர், சிங்கபுர 4ஆம் கட்டைப் பகுதியில் சுற்றுலா விடுதியொன்றை நிர்மாணித்து நடத்தி வந்துள்ளார். அத்துடன், அந்த விடுதியின் ஓர் அறையிலேயே தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கொலை தொடர்பில், கடந்த 28ஆம் திகதி இரத்மலானை பகுதியில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடுதியில் தங்கியிருந்து திருகோணமலையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த இரத்மலானை பகுதியைச் சேர்ந்த நபரே இந்தக் கொலையைச் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பலரிடம் கடன் பட்டிருந்த சந்தேகநபர், அந்தக் கடன்களை அடைப்பதற்காகத் தொழிலதிபரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கொள்ளையிடும் நோக்கில் இந்தக் கொலையைச் செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையின் பின்னர் தங்கச் சங்கிலியைக் கைப்பற்றிக்கொண்டு தப்பிச் சென்ற சந்தேகநபர், அதனைத் தனது மனைவியிடம் ஒப்படைத்துள்ளார்.

பின்னர், அவரது மனைவி கொழும்பிலுள்ள நகைக்கடை ஒன்றில் குறித்த தங்கச் சங்கிலியை 11 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

கிடைத்த பணத்தைத் தனது வங்கிக் கணக்கில் வைப்புச் செய்த சந்தேகநபர், பல்வேறு சந்தர்ப்பங்களில் அதனைப் பயன்படுத்திக் கடன்களைச் செலுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment