கிரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (03) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதன்படி, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும், ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
கிரிஷ் நிறுவனத்துடன் தொடர்புடைய கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள டிரான்ஸ்வொர்க்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள காணியைப் பல்நோக்குத் திட்டத்திற்காக கிரிஷ் நிறுவனத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
தனது பெற்றோரின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு தன்னைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி அவர் தனது சட்டத்தரணிகள் ஊடாகப் பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான உதவிச் சட்டப் பணிப்பாளர் தனுஜா பண்டார, சந்தேகநபருக்குப் பிணை வழங்கப்பட்டால் விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் எனத் தெரிவித்திருந்தார்.
எனினும், நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, அவரது பெற்றோர் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளமையை விசேட சூழ்நிலையாகக் கருத்திற்கொண்டு பிணை வழங்குமாறு கோரியிருந்தார்.
இரு தரப்பினரதும் சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிமன்றம், இன்று பிணை தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
.jpg)