அரசாங்கத்தின் வருவாய் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

 


இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் இலங்கையின் மொத்த அரச வருமானம் 27.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, அரச வருமானம் மற்றும் கொடைகள் மூலம் கிடைத்த மொத்தத் தொகை 2,956 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. மானியங்களைத் தவிர்த்த மொத்த அரச வருமானம், வருடாந்த இலக்கில் 56.1 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானியங்கள் நீங்கலான அரச வருமானம் 2,954.2 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 27.2 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த வருவாய் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக வரி வருமானத்தின் வளர்ச்சி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் அண்மைய இடைக்கால நிதியறிக்கையின்படி, வருமான வரி, பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் மீதான வரிகள் ஆகியவற்றின் அதிகரிப்பினால் மொத்த வரி வருமானம் 2,710.6 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. இது 25.9 சதவீத வளர்ச்சியாகும்.

இறக்குமதி சார்ந்த வரிகள் மற்றும் உள்நாட்டு வரிகள் ஆகிய இரு பிரிவுகளிலும் வரி சேகரிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் அரச வருவாயை அதிகரிப்பதில் இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வரி அல்லாத வருவாயும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி, வரி அல்லாத வருவாய் 243.6 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், இது 43.6 சதவீத வளர்ச்சியாகும்.

நாட்டின் அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு தொடர்பான விபரங்களை நிதி அமைச்சு தனது இடைக்கால நிதியறிக்கையில் வெளியிட்டுள்ளது.

Post a Comment