இரு காதலர்களுடன் கணவனுக்கு மனைவி செய்த செயல்

 


தனது கணவரைக் கொலை செய்து, சடலத்தை ஏரியில் வீசி, அவரது மரணத்தை விபத்தாகச் சித்தரிக்க முயன்ற மனைவி உட்பட மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இந்தியாவின் தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் ஹன்மாஜிபேட் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய தினக்கூலித் தொழிலாளியான கும்மாடி காசிராம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலை தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியான 25 வயதுடைய கும்மாடி சவிதா மற்றும் அவரது இரு காதலர்களான 26 வயதுடைய சிந்தகிந்தி ராமு, 25 வயதுடைய பசுபுலா சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் விசாரணைகளின்படி, சவிதா ராமு மற்றும் சந்தோஷ் ஆகிய இருவருடனும் தொடர்பில் இருந்துள்ளார். இதனால், தனது கணவரைக் கொலை செய்ய இருவருடனும் இணைந்து திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி இரவு, மது அருந்தலாம் எனக் கூறி காசிராமை கிராமத்திற்கு வெளியே மூவரும் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு காசிராம் மதுபோதையில் இருந்தபோது, ராமு நைலோன் கயிற்றால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இதன்போது சந்தோஷ் அவரைத் தப்பிச் செல்ல முடியாதவாறு பிடித்துக் கொண்டிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலையைத் தொடர்ந்து, காசிராமின் சடலத்தை கிராமத்திற்கு வெளியே அமைந்துள்ள பச்சேரா செருவு ஏரியில் வீசியுள்ளனர். அவரது மரணம் நீரில் மூழ்கி ஏற்பட்ட விபத்தாகத் தோன்றும் வகையில் தடயங்களை மறைக்கவும் முயன்றுள்ளனர்.

விசாரணையில் அம்பலமான உண்மை

ஒக்டோபர் 23ஆம் திகதி இரவு ஏரிப் பகுதியில் காசிராமின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, உயிரிழந்தவரின் தந்தை சக்கலி பூமய்யா வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பன்சுவாடா காவல்துறையினர் சந்தேக மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தனர்.

எனினும், உடற்கூராய்வின் முதற்கட்ட அறிக்கையில் காசிராம் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து, சந்தேக மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

தொடர்ந்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதுடன், தொழில்நுட்ப ஆதாரங்களையும் காவல்துறையினர் சேகரித்தனர்.

இதன் அடிப்படையில் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி ஹன்மாஜிபேட் கிராமத்தில் வைத்து சவிதா, ராமு மற்றும் சந்தோஷ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளின்போது மூவரும் கொலையில் தங்களுக்குள்ள தொடர்பை ஒப்புக்கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றத்துடன் தொடர்புடைய அலைபேசிகள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment