அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு முன்பாகப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.
மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு சுகாதார அமைச்சு உள்ளிட்ட அரச அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மருத்துவர்களுக்கான வரிச்சலுகை அடிப்படையிலான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டமை மற்றும் மருத்துவர்களின் வருமானம், பணிசார் கொடுப்பனவுகள் மீதான வரி அதிகரிப்பு ஆகியவை அவர்களுக்குப் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்கான சம்பளத் திருத்தத்தின் கீழ் மருத்துவர்களின் மேலதிக நேர மற்றும் விடுமுறை நாள் கொடுப்பனவுகளில் மூன்றில் ஒரு பங்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்ததும் அவை மீள வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்ததாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சுகாதார அமைச்சின் கீழ் தற்போது 25,000 இற்கும் குறைவான மருத்துவர்களே சேவையில் உள்ளதாகவும், நாட்டின் சுகாதாரத்துறையில் பாரிய ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுகாதாரத்துறையின் அங்கீகரிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கை தொடர்பில் அறிவியல் ரீதியான மீளாய்வு மேற்கொள்ளப்படவில்லை எனவும், இதனால் சுகாதாரப் பணியாளர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளதுடன், சேவையின் தரத்தைப் பேணுவதிலும் சவால்கள் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவுகளை உள்ளடக்குமாறு கடந்த ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்த போதிலும், இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், சுகாதாரத்துறையின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அங்கீகரிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கையை மீளாய்வு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நவம்பர் 10ஆம் திகதி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மருத்துவ சமூகத்தினரின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
