ராஜீவ் காந்தியின் மரணம் குறித்து முன்கூட்டியே எச்சரித்த ராகுல்? சோனியா காந்தியின் அதிர்ச்சித் தகவல்!



இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே, அவரது பாதுகாப்பு தொடர்பில் ராகுல் காந்தி கவலை வெளியிட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

சோனியா காந்தியின் 544 பக்கங்களைக் கொண்ட 'Belonging: A Journey of Love' என்ற சுயசரிதை நூலில், கணவர் ராஜீவ் காந்தியுடனான காதல் வாழ்க்கை, அவரது படுகொலை, குடும்பத்தினர் எதிர்கொண்ட துயரம் மற்றும் அதன் பின்னரான அரசியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு குறித்து ராகுல் காந்தி முன்கூட்டியே தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

ராஜீவ் காந்தியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தந்தையின் இறுதிச்சடங்கிற்காக விரைவில் திரும்பிவர வேண்டிய நிலை ஏற்படலாம் என ராகுல் காந்தி கவலை வெளியிட்டதாக சோனியா காந்தி தனது நூலில் நினைவுகூர்ந்துள்ளார்.

இந்தக் கருத்தை ராகுல் காந்தி, தனது தந்தையின் படுகொலைக்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டமை தொடர்பிலும் சோனியா காந்தி தனது சுயசரிதையில் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் மறுமதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த போதிலும், உரிய மறுஆய்வு இன்றி அப்போதைய வி.பி. சிங் அரசாங்கத்தால் ராஜீவ் காந்தியின் சிறப்புப் பாதுகாப்புப் படை பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சி பெற்ற சிறப்புப் பாதுகாப்புப் படையினருக்குப் பதிலாக உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் சோனியா காந்தி தனது நூலில் தெரிவித்துள்ளார்.

1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசார நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ராஜீவ் காந்தி, தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது குடும்பத்தினர் எதிர்கொண்ட அதிர்ச்சியையும் துயரத்தையும் சோனியா காந்தி தனது சுயசரிதையில் உருக்கமாகப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் மகள் பிரியங்கா காந்தி தனது அறையில் தோழி ஒருவரின் பிறந்தநாள் நிகழ்வுக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்ததாகவும், மகன் ராகுல் காந்தி அமெரிக்காவில் கல்வி பயின்றுகொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி மீதான குண்டுத் தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்ததும், பிரியங்கா காந்தி மிகுந்த பதற்றத்துடன் தன்னிடம் வந்து சம்பவத்தைத் தெரிவித்ததாக சோனியா காந்தி நினைவுகூர்ந்துள்ளார்.

ஆரம்பத்தில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் தவித்ததாகவும், பின்னர் தொலைபேசி மூலம் ராஜீவ் காந்தியின் மரணத்தை உறுதிப்படுத்திக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கணவரின் மரணச் செய்தியைக் கேட்டதும் தன்னால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும், ராஜீவ் காந்தியுடன் தானும் சென்றிருக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் நினைத்ததாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் துயரமான தருணத்தில் பிரியங்கா காந்தி தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்காவில் இருந்த ராகுல் காந்திக்கு நண்பர் ஒருவர் தொலைபேசி மூலம் மோசமான செய்தி இருப்பதாகத் தெரிவித்தபோது, தனது தந்தைக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டதா என ராகுல் உடனடியாகக் கேட்டதாகவும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தியின் இறுதிச்சடங்கின்போது ராகுல் காந்தி எதிர்கொண்ட துயரத்தையும் சோனியா காந்தி நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், ராஜீவ் காந்தியின் இறுதி உடல் டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோது, அவர் தனது கண்களைத் தானம் செய்ய விரும்பியிருந்தமை தனக்கு நினைவுக்கு வந்ததாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குடும்ப மருத்துவரிடம் விசாரித்தபோது, குண்டுத் தாக்குதலில் ஏற்பட்ட கடுமையான உடல் சேதம் காரணமாக அது சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதில் தன்னை மேலும் மனவேதனைக்குள்ளாக்கியதாகவும், கணவரின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் கடுமையான துயரத்தில் ஆழ்ந்ததாகவும் சோனியா காந்தி தனது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு தொடர்பில் ராகுல் காந்தி முன்கூட்டியே வெளியிட்டதாகக் கூறப்படும் எச்சரிக்கையும், படுகொலைக்குப் பின்னர் காந்தி குடும்பத்தினர் எதிர்கொண்ட துயரங்களும் சோனியா காந்தியின் சுயசரிதை மூலம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.


Post a Comment