அனோஜன் சிவராசா விடுதலை – ஜனாதிபதிக்கு குடும்பத்தினர் நன்றி!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்கு தலையீடு செய்தமைக்காக, அவரது குடும்பத்தினர் இன்று (12) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது, இலங்கை மக்களுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்நிற்பது தனது பொறுப்பு என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்கு ஒத்துழைத்த சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், இன, மத, கட்சி வேறுபாடுகளின்றி தலையீடு செய்த அனைவருக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அனோஜன் சிவராசா தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அவரது பெற்றோர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

தமது மகனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றி, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்க ஆரம்பம் முதல் தலையீடு செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, சவூதிக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட் உள்ளிட்ட அதிகாரிகள், சட்டத்தரணிகள் மற்றும் இலங்கை மக்களுக்கு அனோஜனின் தாயார் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தக் காலப்பகுதியில் பங்களாதேஷ் தம்பதியினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்தால், அனோஜனின் பெற்றோர் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாக சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்கவும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment