அநுராதபுரம் ருவன்வெலிசாய சத்தியாக்கிரகப் பகுதியில் உயிரிழக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
ராஜாங்கனே சத்தாரதன தலைமையிலான குழுவினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இவர்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.
பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் ஆரம்பித்த உயிரிழக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பிக்குத்துவத்திலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ராஜாங்கனே சத்தாரதன உள்ளிட்ட குழுவினர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்ததையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த அமைதியின்மையின் போது, ராமஞ்ஞ நிகாயத்தினால் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு காவியுடையில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ராஜாங்கனே சத்தாரதனவின் தலையில் தடிகளால் தாக்கப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற கூடாரத்தை அகற்ற முயற்சித்தபோது மீண்டும் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
