6 மாதங்களில் கோட்டாபய அரசை விட மோசமான நிலை!

6 மாதங்களில் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசுக்கு ஏற்பட்டதை விடவும் மோசமான நிலையே தற்போதைய அரசுக்கும் ஏற்படும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எச்சரித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், அரசு பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டமூலத்தைச் சமர்ப்பித்துள்ளது.

 1988 - 1989 காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட அதிகமானவர்கள் இந்த அரசில் இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி முதற்கொண்டு அதிகமானவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களே இன்று ஆட்சி செய்கின்றனர். 

அவ்வாறிருக்க, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்குச் சட்டம் எதற்கு எனக் கேட்கின்றோம்.

தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்படுபவர்கள் 24 மணிநேரம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுப் பின்னரே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார்கள்.

ஆனால் இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 72 மணிநேரம் காவல்துறை தடுப்புக்காவலில் வைக்க முடியும். 

அவ்வாறு கைது செய்யப்படுபவர்களை 72 மணிநேரம் வைக்க நடவடிக்கை எடுத்தால், காவல் நிலையங்கள் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்படும் அபாயம் இருக்கின்றது.

முன்னாள் காவல்துறை மா அதிபர்கள் மற்றும் காவல்துறை பொறுப்பதிகாரிகள் பலர் இன்று சிறையில் இருக்கின்றார்கள்.

அரசு கூறும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் செய்யப் போனால், இந்த நிலையே தற்போதைய காவல்துறை அதிகாரிகளுக்கும் ஏற்படும்.

எனவே காவல்துறையினர் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும். 

எனவே, இந்தச் சட்டமூலத்தை அரசு உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் இந்தச் சட்டம் அனுமதிக்கப்பட்டால், 6 மாதங்களில் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசுக்கு ஏற்பட்டதை விடவும் மோசமான நிலைமை ஏற்பட்டு, அனைவரும் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

Post a Comment