நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவின் இடைநிலை விசா விண்ணப்பங்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குக் தீவுகளில் சுமார் மூன்று ஆண்டுகளாகத் தவித்து வரும் இலங்கைப் பெண் ஒருவரை மீண்டும் தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை இலங்கை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளது.
50 வயதான ருசிரா ரணசிங்க என்ற பெண்ணே இவ்வாறு குக் தீவில் சிக்கியுள்ளார். தனது ஒரே மகனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை திரும்ப முடியாமல் அவர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகத் தனது சிறிய ரி-ஷர்ட் தொழிற்சாலையை மூடிவிட்டு ருசிரா வெளிநாடு சென்றுள்ளார்.
முதலில் ஹொங்கொங்கில் பராமரிப்புப் பணியாளராகப் பணியாற்றிய அவர், 2022ஆம் ஆண்டு டிசம்பரில் நியூசிலாந்துக்குச் சென்று புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளார்.
இதன்போது, குடிவரவு ஆலோசனை நிறுவனமொன்றின் அறிவுறுத்தலின் பேரில், தற்காலிகமாக நியூசிலாந்தை விட்டு வெளியேறி வெளிநாட்டிலிருந்து வேலைவாய்ப்பு விசாவுக்கு விண்ணப்பிப்பதற்காகக் குக் தீவுகளுக்குச் சென்றுள்ளார்.
எனினும், அவரது வேலைவாய்ப்பு விசா நிராகரிக்கப்பட்டதுடன், நியூசிலாந்தை விட்டு வெளியேறியதால் ஏற்கனவே பெற்றிருந்த புகலிடத்துடன் தொடர்புடைய விசா நிபந்தனைகளையும் அவர் மீறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து ஊடாகப் பயணிப்பதற்காக மூன்று தடவைகளும், அவுஸ்திரேலியா ஊடாகப் பயணிப்பதற்காக நான்கு தடவைகளும் இடைநிலை விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். இருப்பினும், அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஹவாய் மற்றும் தஹித்தி ஊடாக இலங்கைக்குத் திரும்புவதற்கும் அவர் முயற்சித்துள்ளார். எனினும், விசா மற்றும் உயிரியல் அடையாளப் பதிவு தொடர்பான தேவைகள் காரணமாக அந்த முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை.
எதிர்வரும் நவம்பர் மாதம் தனது ஒரே மகனுக்குத் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், எப்படியாவது இலங்கை திரும்பி திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும் என ருசிரா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குக் தீவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் அவருக்கு இலவசமாகத் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அப்பகுதி மக்களும் உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்கி வருகின்றனர்.
மறுபுறம், நியூசிலாந்து இடைநிலை விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள நியூசிலாந்து குடிவரவுத் திணைக்களம், அவர் உண்மையாகவே நியூசிலாந்து ஊடாக வேறு இடத்திற்குப் பயணிக்க விரும்புகிறார் என்பதில் அதிகாரிகளுக்குத் திருப்தி ஏற்படவில்லை என பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், குறித்த பெண்ணை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளது.
வெலிங்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் நியூசிலாந்து அதிகாரிகளுடன் இணைந்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண முயற்சித்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
