சூரிய சக்தித் துறையை பெருநிறுவனங்களுக்கு தாரைவார்க்கிறதா அரசு? FSP கடும் குற்றச்சாட்டு

 

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் பொதுமக்களின் பங்களிப்பை குறைத்து, அதனை பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) குற்றம் சாட்டியுள்ளது.

நுகேகொடையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட, கூரைச் சூரிய சக்தி உற்பத்தியாளர்களுக்கு பயன்படுத்தப்பட்ட Net Accounting, Net Metering மற்றும் Net Plus Plus முறைகள் நீக்கப்பட்டு, Net Plus முறை மட்டுமே தற்போது எஞ்சியுள்ளதாகத் தெரிவித்தார்.

பொதுமக்கள் பயன்படுத்திய சூரிய சக்தி உற்பத்தி முறைகளை கட்டுப்படுத்துவது சிறு உற்பத்தியாளர்களை பாதிக்கும் என அவர் கூறினார். மேலும், வீட்டுப் பாவனைக்கான பேட்டரிகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் நிலையில், பெருநிறுவனங்களின் மெகாவாட் அளவிலான பேட்டரிகளுக்கு வரிச்சலுகை வழங்கப்படுவது பெருநிறுவனங்களுக்கு சாதகமான கொள்கையை வெளிப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பொதுமக்களின் கூரைச் சூரிய சக்தி முதலீடுகள் நாட்டின் மின்கட்டமைப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், இந்தத் துறையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து அரசாங்கமும் மின்சார அதிகாரசபையும் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும் என FSP வலியுறுத்தியுள்ளது.

Post a Comment