இலங்கை ஆசிரியர் சேவைக்குக் கல்வியியல் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில், ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கப் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
உயர் நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக, புதிய சேவைப் பிரமாணக் குறிப்புத் திருத்தம் கொண்டுவருவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகள் உள்ளிட்ட ஆறு சேவைகளின் தொழில்சார் தன்மையை மேம்படுத்துவதற்கும், கல்வியியல் கல்லூரிகளின் அபிவிருத்திக்காகவும் விசேட கல்வித் தொழில்சார் பேரவை ஒன்றை நிறுவ அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பிரதமர் விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்-அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
