முன்னாள் முதலமைச்சர் நடிகை ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா

 

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனின் (எம்ஜிஆர்) வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகவுள்ள ‘புரட்சித் தலைவர் எம்ஜிஆர்’ திரைப்படத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம்  தொடர்பாகத் த்ரிஷாவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக, குறித்த திரைப்படத்தில் எம்ஜிஆராக நடிக்கவுள்ள நடிகர் ஜெ.எம். பஷீர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான ‘பசும்பொன் தேவர்’ திரைப்படத்தில் நடித்த ஜெ.எம். பஷீர், தற்போது எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்தத் திரைப்படத்தைப் பிரபல இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும், அவரது பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஜெ.எம். பஷீர் தெரிவித்துள்ளார். 

தனது மகளும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்ஜிஆர் இன்றும் பலருக்கு அரசியல் முன்னுதாரணமாகத் திகழ்வதாகத் தெரிவித்த அவர், இந்தத் திரைப்படம் அவரது புகழைப் பரப்பும் நோக்கத்தைக் கொண்டது என்றும், எவரையும் விமர்சிக்கும் வகையில் அமையாது என்றும் கூறியுள்ளார்.

இந்தநிலையில், ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் எனத் தான் நம்புவதாகவும் ஜெ.எம். பஷீர் தெரிவித்துள்ளார்.



Post a Comment