வெளிநாட்டுவாழ் இலங்கைப் பிரஜைகள் நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வது மற்றும் பயன்படுத்துவது தொடர்பான நடைமுறைகள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் விசேட விளக்கமளித்தார்.
இலங்கை பிரஜை ஒருவர் ஏற்கனவே இலங்கையில் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்தால், அவர் வெளிநாட்டிலிருந்து மீண்டும் நாட்டுக்குத் திரும்பும் சந்தர்ப்பங்களில் அந்த அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி எவ்வித தடையுமின்றி சட்டப்பூர்வமாக வாகனங்களைச் செலுத்த முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல், வெளிநாட்டில் இருக்கும்போது இலங்கை பிரஜை ஒருவர் தனது இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை வெளிநாட்டிடம் ஒப்படைத்து, அந்நாட்டின் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றிருந்தால், அவர் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிய பின்னர் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து தனது இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஒருவேளை வெளிநாட்டில் வாழும் இலங்கை பிரஜை ஒருவரின் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்துபோயிருந்தால், சாதாரண நடைமுறைக்கு அமைவாக பொலிஸில் முறைப்பாடு செய்து புதிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
இதன்படி, இலங்கை பிரஜைகள் தேவையின்றி மேலதிகப் பணத்தை விரயம் செய்யாமல், தங்களது சட்டப்பூர்வ பிரஜை உரிமையின் கீழ் சாரதி அனுமதிப்பத்திர வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் வலியுறுத்தினார்.
