ஞானசார தேரர் கைது! நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தல்


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவருக்கு எதிராக திறந்த பிடியாணை   பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், களுத்துறை - தினியாவல ஆரண்ய சேனாசனத்தில் வைத்து சனிக்கிழமை (03)  கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், ஞாயிற்றுக்கிழமை (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் திறந்த பிடியாணையொன்றைப் பிறப்பித்திருந்தது.

அத்துடன், அவர் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையிலான வெளிநாட்டு பயணத் தடையையும் நீதிமன்றம் விதித்திருந்தது.

இத்தகைய பிடியாணை அமலில் இருந்தபோதிலும், களுத்துறை - தினியாவல ஆரண்ய சேனாசனத்தில் மறைந்திருந்த ஞானசார தேரர் சனிக்கிழமை (03) அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்   கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் (CCD) அழைத்து வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (04)  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Post a Comment