களுத்துறை - மத்துகம பிரதான வீதியின் குணதிலகவத்தை பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலின் உரிமையாளரான டிராகன் சம்பத் என அழைக்கப்படும் துஷார சம்பத் எதிரிசிங்க அடையாம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
நேற்று காலை இரண்டு அடையாம் தெரியாத நபர்களால் T-56 ரக துப்பாக்கியால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவரது மனைவியும் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரம்பத்தில், களுத்துறை நவீன் என்பவரின் போதைப்பொருள் பணத்தைக் கையாண்டமை தொடர்பான தகராறே இக்கொலைக்குக் காரணம் என செய்திகள் பரவினாலும், உண்மையான பின்னணி முற்றிலும் வேறுபட்டது என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் களுத்துறை நவீன் என்பவரின் கூட்டாளிகள், இலட்சக்கணக்கான ரூபாய் பந்தயம் கட்டப்படும் பூருவ சூதாட்டத்தை நடத்துவதற்காக குறித்த ஹோட்டல் வளாகத்தை வழங்குமாறு கோரி டிராகன் சம்பத்திற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
எனினும், தனது ஹோட்டலை சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்க முடியாது என அவர் கடுமையாக மறுத்துள்ளார்.
இந்த மறுப்பே கொலையாளி கும்பலின் கோபத்திற்கு காரணமாகி, தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக குற்றவியல் பின்னணிகள் ஏதுமில்லாத சம்பத் மீது, உண்மையான கொலையாளிகளே தங்களின் குற்றத்தை மறைக்க போதைப்பொருள் தொடர்பிலான வதந்திகளைப் பரப்பியிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கமைய, இந்த படுகொலை போதைப்பொருள் பண தகராறால் நடந்ததா அல்லது சூதாட்டத்திற்கு இடம் கொடுக்க மறுத்ததால் இடம்பெற்ற பாதாள உலகப் பழிவாங்கலா என்ற கோணங்களில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
