மத்திய நேபாளத்தில் வெளிநாட்டு மலையேறுபவர்களுக்காகத் தயார் செய்து கொண்டிருந்த மலை முகாம் பனிச்சரிவில் சிக்கிப் புதையுண்டதில், குறைந்தது 15 நேபாளப் பணியாளர்கள் உயிரிழந்ததாக மீட்பு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்த மாதத்துடன் முடிவடையும் இலையுதிர்கால மலையேற்றப் பருவத்தில் நிகழ்ந்த மிகவும் கொடூரமான சம்பவம் இதுவாகும்.
வடக்கு மனாங் மாவட்டத்தில் அமைந்துள்ள 7,126 மீட்டர் (23,379 அடி) உயரமுள்ள ஹிம்லுங் ஹிமால் (Himlung Himal) மலையின் அடிவார முகாமில், நேபாளப் பணியாளர்கள் கூடாரங்களை அமைத்து, கயிறுகளைப் பிணைத்துக் கொண்டிருந்தபோது,
வார இறுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் அப் பகுதி புதையுண்டது.
இன்னும் ஒருவர் மாயமாகியுள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்து இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள தேசிய மலை வழிகாட்டிகள் சங்கத்தின் (NNMGA) தலைவர் துல் சிங் குருங் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை பனிக்கு அடியில் இருந்து எட்டு சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்ற ஏழு சடலங்கள் இந்த வார தொடக்கத்தில் மீட்கப்பட்டன.
"இன்று மீட்கப்பட்ட சடலங்கள் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று குருங் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
காணாமல் போன ஒரு பணியாளரைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகள் விரைவில் நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.
பனிச்சரிவு ஏற்பட்ட போது வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் அந்த இடத்தைச் சென்றடையவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நேபாளத்தின் மலைகளைப் பார்வையிடவும் ஏறவும் வருகை தருகின்றனர்.
இது வழிகாட்டிகள், சுமை தூக்குபவர்கள் மற்றும் பிற ஊழியர்களாகப் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, சுற்றுலா தொடர்பான தொழில்களுக்கும் வாழ்வாதாரத்தை வழங்குகிறது.
இருப்பினும், பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகள் உருகுவது அதிகரித்துள்ளதால், இந்த வேலை நாளுக்கு நாள் மிகவும் அபாயகரமானதாக மாறி வருகிறது.
