பொலிஸ் காவலில் சந்தேகநபர் மரணம்: மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

 

கொபேய்கனே பொலிஸ் நிலையக் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடமையைச் சரிவர நிறைவேற்றத் தவறியமைக்காகவே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி, பெத்தேகம பகுதியில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை பிரதேச மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இரண்டு நாட்கள் பொலிஸ் காவலில் இருந்த அவர், ஒக்டோபர் 27ஆம் திகதி இரவு நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த ஐந்து பிரதேசவாசிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், சந்தேகநபரைப் பாதுகாப்பாகப் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும், அவர் தாக்கப்பட்டிருந்தால் உரிய நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதித்திருக்க வேண்டும் என்றும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை எனவும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment