ஹோமாகம பொலிஸ் காவல் மரணம்: தலைமையகப் பொறுப்பதிகாரியும் பணி இடைநிறுத்தம்!

ஹோமாகம பொலிஸ் காவலில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கடமைகளைப் புறக்கணித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஹோமாகம பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹோமாகம பொலிஸ் குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி இன்று (29) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

32 வயதுடைய குறித்த அதிகாரி நேற்று (28) மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சம்பவத்தன்று கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேகநபர், கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணையும் பிரேதப் பரிசோதனையும் இடம்பெற்றுள்ளதுடன், மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு ஆகியன தனித்தனியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

Post a Comment