கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 454 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் மற்றும் எக்ஸ்டசி போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை ஒருவர் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
46 வயதுடைய பொறியியலாளரான குறித்த நபர், நேற்று (28) பாரிஸிலிருந்து தோஹா ஊடாக கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
அவரது பயணப் பொதிகளைச் சோதனையிட்டபோது, சுமார் 256 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5,121 கிராம் கொக்கைனும், 198 மில்லியன் ரூபாய் பெறுமதியான 13,173 கிராம் எக்ஸ்டசி போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட எக்ஸ்டசி போதைப்பொருள் சுமார் 23,000 மாத்திரைகளுக்குச் சமமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ள சுங்க அதிகாரிகள், சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
