கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹபரணையில் இருந்து கந்தளாய் நோக்கி பயணித்த காரொன்று, எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதியும், பின்னாலிருந்த பயணி ஒருவரும் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரதி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவராவார்.
கல்முனை நோக்கிச் சென்ற வேன் ஒன்று, முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இதில் முச்சக்கரவண்டியின் சாரதி, இரு பெண்கள் மற்றும் சிறுமி ஒருவர் காயமடைந்து அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி 43 வயதுடைய பெண் உயிரிழந்தார். இவர் உடவலவ பகுதியைச் சேர்ந்தவராவார்.
ஹொரணையில் இருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த பேருந்துடன், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னாலிருந்த பெண்ணும் கல்பாத்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் கல்பாத்த பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரும், 16 வயதுடைய சிறுமியும் ஆவர்.
இவ்விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
