கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் கடல்சார் பாடநெறியை பயின்று வந்த 20 வயது இளைஞர் ஒருவர் தொடருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் இயங்கிக் கொண்டிருந்த தொடருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் பயாகல பகுதியை சேர்ந்த மலிந்து கௌஷிக நோனிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இந்தப் பாடநெறியின் இறுதிப் பரீட்சைக்கு தோற்றிவிட்டு தொடருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போதே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளார்.
அவருடைய தந்தை வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், அவர் தான் குடும்பத்தின் ஒரே பிள்ளை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயாகல திருச்சிலுவை கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்ற அவர், உயர்தரத்திற்கு மொரட்டுவ புனித செபஸ்தியன் கல்லூரியில் இணைந்து கொண்டார். அதன் பின்னரே இந்தப் கடல்சார் பாடநெறிக்கு சென்றுள்ளார்.
பாணந்துறை தெற்குப் பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
