கொழும்பு இந்துக் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்ற “முத்தமிழ் விழா 2026”! பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரனுக்கு சிறப்பு கௌரவம்


கொழும்பு இந்துக் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றத்தின் 2025/26 ஏற்பாட்டில் “முத்தமிழ் விழா 2026” நேற்று (07.10.2026) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி வாசுகி சுதாகர் தலைமையில் பிற்பகல் 2.00 மணிக்கு மங்கள விளக்கேற்றல், தேவாரம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து வரவேற்புரை, வரவேற்பு நடனம் மற்றும் தலைமையுரை இடம்பெற்றதுடன், மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.

விழாவின் முக்கிய அம்சமாக, கொழும்பு இந்துக் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றத்தினால் வரலாற்றில் முதன்முறையாக “இந்துவின் வித்தகக் குரிசில்” என்ற சிறப்பு விருது அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விருது வாழ்நாள் பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அவரது ஏற்புரையும் இடம்பெற்றது.

நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் துரை மனோகரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் திரு. சு. முரளிதரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

மேலும், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

விழாவின் போது “தமிழ்த் தீபம்” சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், முத்தமிழ் விழா சிறப்புக் காணொளி ஒளிபரப்பு, குழு இசை, பல்லியம், “சத்தியவான் சாவித்திரி” வில்லுப்பாட்டு, கிராமிய நடனம் மற்றும் இலக்கிய நாடகம் உள்ளிட்ட மாணவர்களின் கலைப் படைப்புகளும் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் விருந்தினர்கள், மன்றச் செயற்குழு உறுப்பினர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

நன்றியுரையைத் தொடர்ந்து கல்லூரிக் கீதத்துடன் “முத்தமிழ் விழா 2026” நிறைவடைந்தது.

Post a Comment