நேபாள வெள்ளப் பாதிப்புக்கு ஐ.நா.விடமிருந்து 2 கோடி டொலர் நிதியுதவி!

சீனாவின் திபெத் பிராந்திய எல்லையை அண்டிய பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை இழப்பு மற்றும் சேத நிதியத்திலிருந்து 20 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சுமார் 1,500 பேர் உயிரிழந்ததாகவும், 5,000க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ தரவுகளின்படி, 15,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 60,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீதிகள், பாலங்கள், பாடசாலைகள் மற்றும் 13 நீர்மின் நிலையங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுக்கு சுமார் 2.7 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மீள்கட்டமைப்புச் செலவு 4.7 பில்லியன் டொலரைத் தாண்டக்கூடும் என ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஐ.நா. வழங்கும் நிதியுதவி வெள்ளப் பாதிப்புகளைச் சமாளிக்க நேபாளத்துக்குத் தேவையான மொத்தத் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதாகும்.

காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பேரிடரால் ஏற்பட்ட கடுமையான சேதங்களைச் சமாளிக்க இந்த நிதியுதவி உதவும் என நேபாள விவசாயம், வனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய நேபாள பிரதமர் பலேந்திர ஷா, தமது நாட்டில் ஏற்பட்ட பேரிடர் உலக நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை எனக் குறிப்பிட்டதுடன், நேபாளத்தின் பசுமை இல்ல வாயு வெளியீடு மிகக் குறைவாக இருந்தபோதிலும், வெள்ளத்திற்குக் காலநிலை மாற்றமே காரணம் எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

Post a Comment