இலங்கையில் 14 வயது மாணவனுடன் வற்புறுத்தி தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு நேர்ந்த கதி

 

14 வயது சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆசிரியை ஒருவருக்கு 24 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சினிக் விஜேசேகர தீர்ப்பளித்துள்ளார்.

தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர், ஹிதிகிபுல பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியையாகப் பணியாற்றிய, இரண்டு பிள்ளைகளின் தாயான (வயது 49) ஆவார்.

குறித்த குற்றச்சாட்டுக்கள் மூன்றுக்கு தலா 8 ஆண்டுகள் வீதம் மொத்தம் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், அந்தத் தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்கும் வகையில் (ஒரே காலத்தில்) 8 ஆண்டுகளுக்கு மாத்திரம் சிறைத்தண்டனையை அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குற்றவாளிக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மூன்று குற்றச்சாடுகளுக்கும் தலா 250,000 ரூபாய் வீதம் மொத்தம் 750,000 ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நஷ்டஈட்டுத் தொகையை செலுத்தத் தவறின் மேலதிகமாக ஒரு வருட சிறைத்தண்டனையும், அபராதத் தொகையை செலுத்தத் தவறின் மேலும் ஒரு வருட இலகு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment