அவசர அவசரமாக நாட்டிலிருந்து தப்பியோடும் மஹிந்த ஆதரவாளர்கள் நீதிமன்றத்துக்கே தண்ணிகாட்டிய (சொக்கா மல்லி)

 

அவசர அவசரமாக நாட்டிலிருந்து தப்பியோடும் மஹிந்த ஆதரவாளர்கள்

நீதிமன்றத்துக்கே தண்ணிகாட்டிய பிரேமலால் ஜயசேகர (சொக்கா மல்லி)

முன்னதாகவே அறிந்து தாய்லாந்துக்கு தப்பிச்சென்றார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமலால் ஜயசேகர (சோகா மல்லி) உயர் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்பே தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டறிந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு கஹவத்த பகுதியில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்ட ஏற்பாடுகளின் போது இடம்பெற்ற சுடுசூட்டுக் சம்பவத்தில் சாந்த தொடங்கொட கொல்லப்பட்ட வழக்கில் பிரமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். 

இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இவர்கள், பின்னர் மேல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர். 

இந்த விடுவிப்பை எதிர்த்து கொல்லப்பட்டவரின் மனைவியால் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த வெள்ளிக்கிழமை பிரமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பேரையும் அக்டோபர் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டதுடன், அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்தது.

எனினும், நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்னதாக, அதாவது கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதியே பிரமலால் ஜயசேகர தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டதாக சி.ஐ.டி விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்தத் தகவல் குறித்து சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment