நாமல் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் பணமோசடி தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபருக்குப் பிணை வழங்குவது தொடர்பான உத்தரவு எதிர்வரும் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதவான் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்த வழக்கின் 4 ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் தொடர்பான சட்டமா அதிமரின் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதால், உரிய குற்றச்சாட்டுக்களை தாமதமின்றி தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏர்பஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் பல முறை இலங்கைக்கு வருகை தந்து வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
