மண்முனை தென் எருவில்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (02.09.2026) பிரதேச செயலாளர் உதயசிறிதர் அவர்களின் ஒருங்கிணைப்பில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கௌரவ கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
🔹 பெரியகல்லாறு விளையாட்டு மைதானம்
கோட்டைக்கல்லாறு விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடியபோது, தொடர்ச்சியான அரசியல் தலையீடுகளே இதுவரை மைதான அபிவிருத்தியில் முன்னேற்றம் ஏற்படாததற்கான முக்கிய காரணமாக இருப்பதாக நான் சுட்டிக்காட்டினேன்.
அத்துடன், எதிர்வரும் வாரத்தில் பிரதேச சபையும் Clean Sri Lanka திட்டத்துடன் இணைந்து மைதானத்தை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
🔹 கடற்றொழிலாளர்களுக்கான Beacon Light
கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, தேவையான இடங்களில் Beacon Light பொருத்துவதற்கான கோரிக்கையை கடற்றொழில் அமைச்சிடம் முன்வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தேன்.
🔹 களுதாவளையில் குறைந்த மின்னழுத்தப் பிரச்சினை
களுதாவளை பகுதியில் குறைந்த மின்னழுத்தம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரச்சினைக்கு, உடனடியாக மின்னழுத்தத்தை பரிசோதித்து, மக்களுக்கு உரிய தீர்வை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன்.
🔹 பெரியகல்லாறு குடிநீர் பிரச்சினை
பெரியகல்லாறு பகுதியில் நீர்க்குழாய் பொருத்தும் பணிக்கு கல்முனை மாநகர சபையினால் தடைகள் ஏற்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர் தெரிவித்தார்.
இதன்போது, குறித்த பணியை முன்னெடுப்பதற்குத் தேவையான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தேன்.
🔹 களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் திண்மக்கழிவு பிரச்சினை
களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் நிலவும் திண்மக்கழிவு அகற்றல் பிரச்சினைக்கு, வைத்தியசாலை நிர்வாகம், பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தீர்வு காண்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. இதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
மேலும், கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, பொதுப் போக்குவரத்து, பேருந்து சேவைகள், காணி விவகாரங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கூட்டங்களில் பதிவு செய்வதுடன் நின்றுவிடாமல், அவற்றுக்கு நடைமுறைத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மே. வினோராஜ், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
