மாத்தரையில் ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாத்தறை - வெள்ளமுல்ல பகுதியில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கோனஹேனை முகாமின் உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்று (05) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 1 கிலோ 9 கிராம் மற்றும் 205 கிராம் ஹெரோயின் ஆகியவற்றை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற இரண்டு சந்தேகநபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக மாத்தறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடையவர்கள் என்பதுடன், சந்தேகநபர்களில் ஒருவர் தங்கியிருந்த அறையைச் சோதனையிட்டபோது ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்று, டி-56 ரக வெடிக்காத தோட்டாக்கள் 56 மற்றும் கைத்துப்பாக்கிக்குரிய தோட்டாக்கள் 47 ஆகியனவையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
