நிதி மோசடி சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாளர் அமைச்சர் ஜொன்ஸ்ட்டன் பெர்னாண்டோ மற்றும் ஹேமந்த லலித் டி சில்வா ஆகியோர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ச கலையரங்கிற்காக கதிரைகள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் டிசைன் பாயிண்ட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் ஹேமந்த லலித் டி சில்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு பிரதம நீதிவான் அஸங்க எஸ். போதரகம இவர்களை பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
நீதிவான் இரு சந்தேகநபர்களுக்கும் தலா 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளை அனுமதித்ததுடன், அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்துள்ளார்.
தேவையான தரங்களைப் பூர்த்தி செய்துகொண்டு மிகக் குறைந்த ஏலத்தைச் சமர்ப்பித்த நிறுவனத்திடமிருந்து கதிரைகளைக் கொள்வனவு செய்வதற்குப் பதிலாக, டிசைன் பாயிண்ட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திடமிருந்து கதிரைகளைக் கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்ததன் மூலம், சந்தேகநபர்கள் இருவரும் 7.9 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாகவே இருவரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
