மனித கொலைக்கு முயன்ற ஒருவர் கைது

 

துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதக் கொலைக்கு முயன்ற குற்றத்திற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (01) முற்பகலில் கங்கொடவில பிரதேசத்தில் வைத்து குறித்த பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளின் குழுவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 42 வயதுடைய கங்கொடவில, நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி அத்துருகிரிய காவல் துறைப் பிரிவிற்குட்பட்ட மலவியாகந்த வீதிப் பிரதேசத்தில் நபர் ஒருவரைத் துப்பாக்கிச் சூடு நடத்தி பலத்த காயங்களை ஏற்படுத்திய சம்பவத்திற்குச் சந்தேக நபர் உதவி மற்றும் உடந்தையாகச் செயற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், குறித்த குற்றச் செயலுக்காகச் சந்தேக நபர்கள் வந்ததாகச் சந்தேகிக்கப்படும் போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சந்தேக நபரின் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட குற்றச் செயல் வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் திட்டமிடப்பட்டு இயக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த போலி இலக்கத் தகடுகள், கடந்த ஜூலை 19 ஆம் திகதி தெஹிவளை காவல் துறைப் பிரிவிற்குட்பட்ட மயானம் ஒன்றில் நபர் ஒருவரைத் துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதக் கொலைக்கு முயன்ற சம்பவத்திற்கும், ஜூலை 21 ஆம் திகதி கல்கிசை காவல் துறைப் பிரிவிற்குட்பட்ட விகாரை வீதிப் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிற்கு வந்து துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தித் தாக்கிய சம்பவத்திற்கும் சந்தேக நபர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Post a Comment