காந்தளாய் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, டீசலுக்குப் பதிலாக சட்டவிரோதமான முறையில் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்பட்டு வந்த இரண்டு தனியார் பேருந்துகள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
நேற்று (12) மாலை இடம்பெற்ற இச்சோதனையின் போது, குறித்த பேருந்துகளின் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியிலிருந்து உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்று திருகோணமலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இந்தப் பேருந்துகள், காந்தளை பொத்தான்காடு சந்தியில் வைத்து பொலிஸாரால் மறிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்தி பேருந்துகள் இயக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, பேருந்துகள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டதுடன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
