“ஒவ்வொரு மாணவரும் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உணரும் இடங்களாகப் பல்கலைக்கழகங்கள் அமைய வேண்டும்”
கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன
ஒவ்வொரு மாணவரும் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உணரக்கூடியதுடன், தமது கருத்துக்களை விமர்சன ரீதியாக வெளிப்படுத்தக்கூடிய இடங்களாகப் பல்கலைக்கழகங்கள் அமைய வேண்டும் எனவும், அதேவேளை பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பணியாற்றும் ஒவ்வொரு பணியாளரும் பாதுகாப்பானதும் தரமானதுமான தொழில்சார் சூழலில் பணியாற்றக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும் எனவும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
2026.09.04 அன்று கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் வளாகப் பணிப்பாளர்களின் குழுவான (CVCD) 2026 மாநாட்டில் கலந்துகொண்டபோதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் பல்கலைக்கழகக் கட்டமைப்பை எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்துவதற்குத் தேவையான கொள்கை விடயங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கும் பிரதான ஆலோசனைக் குழுவாக இக்குழு செயற்படுகிறது. 1979ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்குழு, இலங்கையின் 22 பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் மற்றும் வளாகப் பணிப்பாளர்களின் பிரதிநிதித்துவத்துடன் இயங்கி வருகின்றது.
புத்தாக்கம், சர்வதேச அங்கீகாரம் மற்றும் தேசிய அபிவிருத்தி ஆகிய துறைகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் இலங்கையின் பல்கலைக்கழகங்களை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டு இவ்வாண்டிற்கான குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், இக்குழுவின் 500ஆவது கூட்டத்தொடர் நிறைவடைந்ததை நினைவுகூரும் நிகழ்வும் இம்மாநாட்டின்போது இடம்பெற்றது.
இந்நிகழ்வில், இலங்கையின் உயர்கல்விக் கட்டமைப்பில் கல்விச் சமத்துவம், உள்ளடக்கிய கல்வி, கல்விச் செயற்பாடுகளை மதிப்பீடு செய்தல், டிஜிட்டல் மாற்றம் மற்றும் ஆராய்ச்சிச் செயற்பாடுகள் ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான கருத்துகள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான குழுக் கலந்துரையாடலும் நடைபெற்றது.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், நவீன உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப பல்கலைக்கழகங்களின் வகிபங்கு மாற்றமடைய வேண்டும் எனக் குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக மாத்திரம் வருகை தரும் இடங்களாக இருக்கக் கூடாது எனவும், அவை இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்து, வேகமாக மாற்றமடைந்து வரும் உலகிற்குத் தேவையான வகையில் அவர்களைத் தயார்படுத்தும் நிறுவனங்களாகவும் மாற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, நவீன உலகில் முக்கியப் போக்காக உருவெடுத்துள்ள செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இலங்கையின் உயர்கல்வித் துறையில் கற்றல் மற்றும் ஆராய்ச்சிச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், அவற்றை பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான முறையில் பயன்படுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகங்களில் இணையப் பாதுகாப்பு (Cybersecurity) தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
எமது உயர்கல்வி நிறுவனங்கள் மேலும் புத்தாக்கமிக்க நிறுவனங்களாக அமைய வேண்டும் என வலியுறுத்திய பிரதி அமைச்சர், நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் காணப்படும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான புதிய தீர்வுகளை உருவாக்குவதில் உயர்கல்வி நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் புத்தாக்கங்களைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். அத்துடன், புதிய உற்பத்திகள் மற்றும் சேவைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்முயற்சிகளை உருவாக்குவதற்கு மாணவர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளையும் பல்கலைக்கழகங்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், உயர்கல்வி நிறுவனங்களின் ஊடாக புதிய உலகின் வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்குவதற்கும், நாட்டின் மனிதவள மேம்பாட்டிற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் கொள்கை ரீதியான நடவடிக்கைகள் தொடர்பிலும் பிரதி அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் கே. எல். வசந்த குமார, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி பிரீதிகா சகலசூரிய உள்ளிட்ட பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் வளாகப் பணிப்பாளர்களின் குழுவின் தலைவர், உபவேந்தர்கள், பணிப்பாளர்கள் மற்றும் உயர்கல்வித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
