பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் போலி சாட்சியம் அளித்த சாட்சியாளர் ஒருவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த சாட்சியாளரை 20 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, யோசித்த தரப்பில் சாட்சியமளிப்பதற்காக காணி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் பாலித்த கமகே என்பவர் பிரசன்னமாகியிருந்தார்.
குறித்த சாட்சியாளரின் சாட்சியங்கள் பதிவாகிக் கொண்டிருந்தவேளையில், நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இந்த சாட்சியாளர் விசாரணை அதிகாரிகளிடம் வழங்கிய வாக்குமூலங்களை விட முரண்பாடான விடயங்களை தற்போதைய தருணத்தில் வெளிப்படுத்துவதாகவும், இதனால் இவரை முறைப்பாட்டுக்கு எதிரான சாட்சியாளராகப் பிரகடனப்படுத்தி குறுக்கு விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
அதற்கமைய, குறித்த சாட்சியாளரிடம் குறுக்கு விசாரணை செய்வதற்கு நீதிபதி பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கு அனுமதி வழங்கினார்.
அதன்படி பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் குறுக்கு விசாரணைகளுக்குப் பதிலளித்த சாட்சியாளர், 'நான் காணிகளை வாங்கி விற்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறேன். இந்த வழக்கு தொடர்பாக நான் இரண்டு வாக்குமூலங்களை வழங்கினேன். மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இருந்தபோது அங்கு பணியாற்றிய தரிந்து என்ற நபருக்கு அரச டெண்டர்கள் சிலவற்றை பெற்றுக்கொள்வதற்காக 142 இலட்சம் ரூபாயை வழங்கியதாக நான் அந்த வாக்குமூலங்களில் குறிப்பிடவில்லை.
பின்னர் நான் பொலிஸாருக்கு மூன்றாவது வாக்குமூலம் ஒன்றை வழங்கினேன். அந்த மூன்றாவது வாக்குமூலத்தில் முன்னைய இரண்டு வாக்குமூலங்களில் நான் கூறிய விடயங்கள் பொய்யானவை எனக் குறிப்பிட்டிருந்தேன்' எனத் தெரிவித்தார்.
அப்போது நீதிமன்றத்தில் உரையாற்றிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல், 'இந்தக் சாட்சியாளர் கூறுபவை எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற விடயங்களை அனுமதிக்க முடியாது. இப்படிப் போனால் இது ஒரு கேலிக்கூத்தாகிவிடும்' என்றார்.
இதனைத் தொடர்ந்து சாட்சியாளரை எச்சரித்த நீதிபதி, உரிய முறையில் சாட்சியமளிக்குமாறு அறிவுறுத்தினார்.
கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் சாட்சியாளருக்கு நீதிபதி மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இறுதியில், குறித்த சாட்சியாளருக்கு எதிராக குற்றவியல் முறைப்பாட்டுச் கோவையின் 449 ஆம் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பொய்யான சாட்சியமளித்தது தொடர்பில் இந்த வழக்கு விசாரணை முடிவில் அட்டர்னி ஜெனரல் நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாக நீதிபதி சாட்சியாளருக்கு அறிவித்தார்.
அதன்படி, 20 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் சாட்சியாளரை விடுவிக்க உத்தரவிட்ட மேல்நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என கடுமையாக எச்சரித்தார்.
இதற்கு முன்னர், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் நெறிப்படுத்தலின் கீழ் சாட்சியமளித்த பிலியந்தலப் பகுதியைச் சேர்ந்த வொலெட் பெர்னாண்டோ என்ற பெண் சாட்சியமளிக்கையில், 'தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் எனக்குச் சொந்தமான காணித்துண்டு ஒன்றை விற்பனை செய்வதற்காக அருகில் இருந்த யோஷித ராஜபக்ஷவின் வீட்டிற்குச் சென்றேன்.
எனது காணிக்கு 25 இலட்சம் ரூபாய் தருவதாகக் கூறினார்கள். நான் 50 இலட்சம் ரூபாய் கேட்டேன். முடியாது என்றார்கள். ஒரு கோடி ரூபாயை மூவருக்குப் பங்களித்துக் கொடுக்க வேண்டும் என்றார்கள். அதன்படி எனது காணித்துண்டுக்கு 33 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது' என்றார்.
இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பெண் சாட்சியாளர், 'எனது காணிகளை டேசி பொரெஸ்ட் என்ற பெண்ணுக்கு விற்கவில்லை. யோஷித ராஜபக்ஷவிற்கு விறபதாகவே நான் அறிந்திருந்தேன். டேசி பொரெஸ்ட் என்ற பெண்ணை எனக்குத் தெரியாது' என்றார்.
தரப்பு சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பெண் சாட்சியாளர், 'எனது காணிக்கான விலையைப்பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஷிரந்தி ராஜபக்சவின் வீட்டிற்குச் சென்றேன். அங்கே டேசி பொரெஸ்ட் என்ற பெண் இருந்தாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. நான் காணி உரிமையை விலக்கிக் கொள்ளும் பத்திரத்தில் நாமல் ராஜபக்வவின் அலுவலகத்தில்தான் கைச்சாத்திட்டேன். அமர்ந்திருந்த மூவர்தான் பணத்தைக் கொடுத்தார்கள்' என்றார்.
