மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரிய மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வழங்கக் கோரி, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மயிலத்தமடு – மாதவனைப் பிரச்சினை குறித்துப் பேசி, பேசி நாங்கள் களைத்துவிட்டோம். கடந்த மே மாதம் ஜனாதிபதி மட்டக்களப்பிற்கு விஜயம் செய்து, மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான 1,570 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வழங்கி உத்தரவு இதுவரை ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை? என அவர் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் மேய்ச்சல் நிலங்கள் தீ வைக்கப்பட்டும், உழவு இயந்திரங்களால் அழிக்கப்பட்டும் ஆக்கிரமிக்கப்படுகின்றன. வெளியாட்களுக்கு இதில் அரசியல் மற்றும் நிதி ஆதரவு வழங்கி இன முரண்பாட்டை உருவாக்கச் சிலர் முயல்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.
மேலும் பண்ணையாளர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. அரசாங்கம் இனியும் தாமதிக்காமல் உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் என சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
சாணக்கியன் எம்.பி.யின் உரையைத் தொடர்ந்து பதிலளித்த விவசாய மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் லால் காந்த, "சாணக்கியன் முன்வைத்த விடயங்கள் அனைத்தும் உண்மையே, அவற்றில் எதனையும் நான் நிராகரிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் உறுதி அளித்தார்.
.png)