இலவசத்தை துண்டாடும் கிழக்கின் சில வைத்தியர்கள்
IVF கனவை சீரழிக்கும் பண ஆசையும்
அரச நிதியில் அரங்கேறும் அரசியலும்
தனியார் வைத்தியசாலைகளின் சுயலாப நோக்கம் காரணமாக செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறை பாதிக்கப்பட்டள்ளதாக மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.
என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையில் வசிக்ககூடிய மூவின மக்களும் திருமணமானதன் பின்னர் சுமார் 6 முதல் 7 வருடங்கள் கடந்த நிலையில் பிள்ளை செல்வம் இன்றி மருத்துவ பிரச்சினையால் அவதியுறுகின்றனர். ஆனால் இந்த தனியார் மருத்துவமனைகளை நடத்துகின்ற கயவர்கள் 50 இலட்சம் ரூபாவை வாங்குகின்றனர். அதனை நாங்கள் நிறுத்தி, களுவாங்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ள இணக்கம் தெரிவித்தோம். அதாவது எங்களது பிரதேச சபைக்கு வருகின்ற துவிச்சக்கரவண்டி நிறுத்துமிடத்திற்கான பணத்தை முழுவதுமாக தானம் செய்திருக்கின்றனர். அந்தப் பணத்தில் 1740 பெண்களுக்கு மருத்துவம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் பணத்தினையேனும் பெறாமல் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அந்த் பணத்தில் 8 இலட்சம் ரூபாவிற்கு ஊசி மருத்துகளை கொள்வனவு செய்ய கொடுத்திருக்கின்றோம். ஆனால் அதனையும் வாங்கவில்லை. குறித்த மருத்துவ சிசிக்சைக்காக 50 இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்படுகின்றது. ஆனால் முறையாக அந்த சேவை செய்யப்படவில்லை. சிலரின் அரசியல் இலாப செயற்பாடுகளுக்காக அந்த பணம் பயன்படுத்தப்படுகின்றது. நாங்கள் 1740 பேருக்கு அந்த சிகிச்சையை செய்கின்றமையினால் தனியார் வைத்தியசாலைகளுக்கு பாதிப்பாக அமையும் என்பதற்காக அந்த நிதியும் நிறுத்தப்பட்டது. அதற்கு உடந்தையாக செயற்பட்டது இந்த எம் எஸ் அதிகாரிகாரியாவார். உதாரணமாக பெண் ஒருவருக்கு 6 கிழமைகள் தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்டது. 3 தடவைகள் ஊசியேற்றப்பட வேண்டும் என்றார்கள். இரண்டாவது ஊசி ஏற்றப்படவில்லை. மட்டக்களப்பிலுள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் அந்த சிசு வயிற்றில் கருச்சிதைவடைந்தது. இது யாருடைய பிழை? குறித்த மருத்துவத்திற்காக சென்றவர்கள் பணம் கிடைக்காமையினால் இடைநடுவில் அதனை கைவிட்டு நிற்கின்றனர். இதற்கெல்லாம் யார் காரணம்? இதனையே நாங்கள் எதிர்த்தோம், நாங்கள் எந்தக்கல்வர்களோடும் தொடர்பில்லை என்று கூறியதற்கான காரணம் இதுதான். வழங்கப்படுகின்ற பணம் உங்களுடையதா இல்லையே? உங்களின் சேவைக்கான பணத்தினை அரசாங்கம் தருகின்றது. ஒரு பிரதேசத்திற்கு சொந்தமான பணத்தினையே நாங்கள் வழங்கினோம். அதன் வாயிலாக உங்களுக்கு சிகிச்சையை வழங்குவதில் என்ன தடுமாற்றம் காணப்படுகின்றது. ஆகையினால் நான் சொல்கின்றேன். யார் எதிர்த்தாலும், மீண்டும் குறித்த சிகிச்சை முறையினை நாங்கள் கொண்டு வருவோம். அமைச்சினூடாக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. 12 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பணம் எங்களிடம் உள்ளது. என்றார்.
இதன்போது குறுக்கிட்ட மருத்துவர் வினோத், இந்த சிகிச்சை முறை தொடர்பில் அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டுச்சென்றோம். சில இடங்களில் இதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை. எனினும் யாழ்ப்பாணத்தில் இயங்கி வருகின்றது. தயர்மார்களின் நன்மை கருதி செய்துக்கொண்டிருக்கின்றார்கள். இது நிறுத்தப்பட்டதற்கான காரணம், குறித்த சிகிச்சை முறைக்கு தனியார் நிறுவனம் ஒன்று நிதி வழங்கிக்கொண்டிருந்தது. ஆனால் இது எதற்காக நிறுத்தப்பட்டது என தெரியவில்லை என சிலர் தெரிவித்தார்கள். அரசாங்கம் எதிர்நோக்குகின்ற நிதிப்பற்றாக்குறையான சூழ்நிலையில் அந்த நிதியை பெற்றுக்கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்தார்கள். இந்த நிலையிலேயே களுவாஞ்சிக்குடி கூட்டத்தில் நிதி தேவை குறித்து அறிவிக்கப்பட்டது. அப்போது நான் அதனை வழங்குவதாக தெரிவித்து நீங்கள் முன்வந்தீர்கள். அது மாத்திரமின்றி நீங்கள் வழங்கிய பணத்திற்கு மருந்துகளை வழங்கினார்களா இல்லையா என்பதும் எங்களுக்கு தெரியாது. அவ்வாறு வழங்கவில்லையாயின் நீங்கள் அதற்கான நடவடிக்கையை பிரத்தியேகமாக எடுக்க வேண்டும். மாறாக வைத்தியர்களின் செயற்பாடுகளுக்குள் கொண்டு வந்து திணிக்க முயல்வது தவறாகும். என்றார்.
இதன்போது மீண்டும் மண்முனை தென் எருவில்பற்று தவிசாளர் குறுக்கிட்டதன் போது பிரச்சினை தீர்வின்றி தொடர்ந்தது. இதன்போது குறித்த பிரச்சினை தொடர்பில் இன்று நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்வுகளை மேற்கொள்வோம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சர்ச்சையானது ஓரளவுக்கு ஓய்ந்த நிலையில், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறையினை குழந்தையில்லாதவர்களின் நன்மை கருதி நான் கட்டாயம் அமுல்படுத்துவேன் என தவிசாளர் உறுதியாக தெரிவித்தார்.
மருத்துவர் வினோத் என்பவருக்கு செய்றை கருத்தரிப்பு உள்ளிட்ட பல சிகிச்சை முறைகளை மேற்கொள்வதற்கான தனியார் வைத்தியசாலை ஒன்று காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
