தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்-வெளியான காரணம்

 

கொட்டகலை தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான லொக்கில் தோட்டப் பகுதியில் புதிய மர ஆலை ஒன்று அமைக்கப்படுவதை எதிர்த்து, குறித்த தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

மர ஆலை அமைக்கப்படவுள்ள இடத்திற்கு அருகில் கிறிஸ்தவ தேவாலயமும், தோட்ட மக்கள் வழிபாடுகளில் ஈடுபடும் கோயிலும் அமைந்துள்ளன. 

ஆலை இயங்கத் தொடங்கினால் வழிபாடுகளில் அமைதியாக ஈடுபட முடியாத சூழல் ஏற்படும் என தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தேயிலை கொழுந்து கொள்வனவு செய்யும் நிலையமும், தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதியும் அமைந்துள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இந்த ஆலை அமைவது பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தும்.

பிரதான வீதியோரத்தில் மர ஆலை அமைக்கப்படுவதால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம் உள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.

ஏற்கனவே குறித்த பகுதியில் இருந்த தேயிலைச் செடிகள் பிடுங்கி எறியப்பட்டுள்ளதுடன், தேயிலை கொழுந்து கொள்வனவு செய்யும் கட்டடமும் இடிக்கப்பட்டு மர ஆலை அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தோட்ட நிர்வாகத்தால் இந்த மர ஆலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் அதிகம் புழங்கும் மற்றும் உணர்திறன் வாய்ந்த இத்தகைய பகுதியில் மர ஆலை நிர்மாணிப்பது முற்றிலும் பொருத்தமற்றது என வலியுறுத்தும் தோட்டத் தொழிலாளர்கள், உடனடியாக இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment