மக்களுக்கான அவசர அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக நாட்டின் பல பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார இது குறித்து தெரிவிக்கையில், ஈரமான வலயப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நாவலப்பிட்டி பகுதியில் மகாவலி கங்கையின் நீர்மட்டம் பாரிய வெள்ளப் பெருக்கைத் தொட்டுள்ளது. இதனால் நாவலப்பிட்டி, பேராதனை, கம்பளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். களனி கங்கை மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 150 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் நோர்வுட், கித்துல்கல, அவிசாவளை ஆகிய பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அவிசாவளை, கித்துல்கல, யட்டியாந்தோட்டை மற்றும் நோர்வுட் பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் இரத்தினபுரி, மில்லகந்த மற்றும் மகுரு ஓயா பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்து, சில இடங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரத்தினபுரி, புளத்சிங்கள, பாலிந்தநுவர மற்றும் குடா கங்கை கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். நில்வளா மற்றும் ஜின் கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 100 மி.மீக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தவலம, ஹினிதும, நாகொட, அக்குரஸ்ஸ மற்றும் பிட்டபெத்தர ஆகிய தாழ்நிலப் பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் தற்போது சாதாரண அளவில் நீர்மட்டம் உயர்ந்து வந்தபோதிலும், மழை நீடித்தால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. சூழ்நிலையை நீர்ப்பாசன திணைக்களம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவைக்கேற்ப பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment