மெட்ரோ பஸ் சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவாக்கம் செய்து கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (07) கடவத்த மெட்ரோ டிப்போ வளாகத்தின் செயல்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இம்மாதத்திற்குள் மெட்ரோ பஸ் சேவையின் பேருந்துகளின் எண்ணிக்கையை 122 ஆக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் 50 பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இவ்வருட இறுதிக்குள் அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் மெட்ரோ பஸ் சேவையை 172 பேருந்துகள் வரை விரிவாக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மெட்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் பஸ் சேவையை முன்னெடுப்பதற்கு எதிர்காலத்தில் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நகர்ப்புற போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், மெட்ரோ பஸ் சேவைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, Clean Sri Lanka செயலகம், இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் லங்கா மெட்ரோ டிரான்சிட் தனியார் நிறுவனம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கடவத்த மெட்ரோ டிப்போ வளாகத்தின் செயல்பாடுகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
மெட்ரோ திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது டிப்போ வளாகம் கடந்த 04 ஆம் திகதி பத்தரமுல்லை, தலங்கம பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
முதல கட்டத்தின் கீழ் தலங்கம, கடவத்த, ஏகல மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு 04 புதிய டிப்போக்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது மெட்ரோ பஸ் சேவையின் வழித்தட இலக்கம் 01 இன் கீழ் மாகும்பூரவிலிருந்து மகரகம ஊடாக கடவத்த வரை சேவைகள் இயங்கி வருகின்றன.
இவ்வழித்தடத்திற்காக 15 புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன
பேருந்து நிறுத்தங்கள், ஒருங்கிணைந்த கட்டண முறைகள் (Integrated Payment Systems), டிப்போ வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உட்பட ஏனைய போக்குவரத்து சேவைகளுடனான தொடர்பை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பொதுப் போக்குவரத்துச் சேவையில் பிரதான பங்கு வகிக்கும் இலங்கை போக்குவரத்து சபையை (SLTB) மேலும் வலுப்படுத்துவதற்காக, இவ்வருட இறுதிக்குள் 600 புதிய குளிர்சாதன (A/C) பேருந்துகளை இறக்குமதி செய்யவும், எல்.டபிள்யூ.டி நிதியைப் பயன்படுத்தி மேலும் 200 பேருந்துகளைக் கொள்வனவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
