கோட்டாவின் சாட்சியம் - எனக்கு எதுவும் நினைவில்லை - மகிழ்ச்சியில் தென்னிலங்கை




சமூக தன்னார்வ போராளிகளான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு நேரில் சென்று, நிகழ் நிலை ஊடாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

சாட்சியமளித்தபோது, நீண்ட காலம் கடந்துள்ளதால் சம்பவங்கள் தொடர்பான பல விடயங்கள் தனக்கு நினைவில் இல்லை என அவர் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் கடத்தல்கள் மற்றும் காணாமலாக்கல்கள் தொடர்பில் நேரடியாக தலையிட்டு அறிவுறுத்தல்களை வழங்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையும் கோட்டாபய மறுத்தார்.

தனது பொறுப்பு அரசாங்கத்தால் எடுக்கப்படும் கொள்கைத் தீர்மானங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிப்பதாக மட்டுமே இருந்ததாகவும், களத்தில் இடம்பெற்ற எந்தவொரு நடவடிக்கையிலும் தான் நேரடியாக ஈடுபடவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், சம்பவங்கள் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என்றும், அனைத்து காணாமல்போகும் சம்பவங்களும் தேசிய பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை என்றும் கோட்டாபய சாட்சியமளித்தார்.

கேள்வி: சட்டத்தரணி நுவான் போபகே:

ஊடகவியலாளர் கீத் நொயார் உங்களுக்கு நினைவிருக்கிறாரா?

பதில்: கோட்டாபய

நினைவிருக்கிறது. அந்த சம்பவம் ஓரளவுக்கு நினைவிருக்கிறது. ஆனால் விபரங்கள் நினைவில் இல்லை.


கேள்வி: சட்டத்தரணி :

'ஓரளவுக்கு நினைவிருக்கிறது' என்று கூறியது எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

பதில் கோட்டாபய :

ஒரு சம்பவம் இடம்பெற்றது என்பது நினைவிருக்கிறது. ஆனால் அதற்காக நான் இன்று தயாராகி வரவில்லை. அதனால்தான் ஓரளவுக்கு நினைவிருக்கிறது என்று கூறினேன்.

கேள்வி: சட்டத்தரணி :

கீத் நொயார் காணாமல் போனது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

பதில்: கோட்டாபய :

ஐயா, எனக்குத் தெரிந்தவரை கீத் நொயார் காணாமல் போகவில்லை.

கேள்வி: சட்டத்தரணி:

அவரை சிலர் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தியதாக உங்களுக்குத் தெரியுமா?

பதில் கோட்டாபய

இப்போது எனக்கு நினைவில்லை

அவர் கடத்தப்பட்டதாக எனக்குத் தெரியாது. ஆனால் அவர் காணாமல் போய் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக எனக்குத் தெரியும்.

கேள்வி சட்டத்தரணி :

அவர் காணாமல் போனதாக உங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது நினைவிருக்கிறதா?

பதில் கோட்டாபய :

அது 15 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம். இப்போது எனக்கு நினைவில்லை. தொலைபேசியில் யார் தொடர்புகொண்டார்கள் என்பதும் நினைவில்லை.


கேள்வி சட்டத்தரணி :

அப்போது காவல்துறைமா மா அதிபராக இருந்த ஜயந்த விக்ரமரத்னவுக்கு அது தொடர்பில் நீங்கள் அறிவித்தது நினைவிருக்கிறதா?

பதில் கோட்டாபய :

அப்படியொரு சம்பவம் குறித்து நான் அறிந்திருந்தால், அது தொடர்பில் காவல்துறைமா மா அதிபருக்கு அறிவித்திருப்பேன்.

கேள்வி சட்டத்தரணி :

நீங்கள் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்தீர்கள். மேஜர் ஜெனரல் ஹெந்தாவிதாரணவுக்கு அது தொடர்பில் அறிவித்தது நினைவிருக்கிறதா?

பதில் கோட்டாபய :

இது நீண்ட காலத்திற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம். அதனால் தற்போது அது தொடர்பில் எனக்கு நினைவில்லை.

கேள்வி சட்டத்தரணி :

கீத் நொயாருக்கு கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர், அவரை ஓரிடத்தில் விட்டுச் சென்றதாக உங்களுக்குத் தெரியுமா?

பதில் கோட்டாபய :

எனக்கு நினைவில்லை, ஐயா.


கேள்வி சட்டத்தரணி:

கீத் நொயாரை கடத்திச் சென்று கொலை செய்யாமல் விடுவித்தது உங்கள் உத்தரவின் பேரில்தான் என நான் உங்களிடம் தெரிவிக்கிறேன்.


Post a Comment