ரஜீவ் காந்தியைத் துப்பாக்கியால் தாக்கிய இலங்கை – ராஜ்நாத் சிங்கை வரவேற்குமா?

 

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் மற்றும் உயர் மட்டப் பிரதிநிதிகளின் தொடர்ச்சியான வருகைகள் என்பன பிராந்திய அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவதில் நிலவும் தாமதமும், அதனுடன் தொடர்புடைய சர்ச்சைகளும் அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளன.

நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது பல்வேறு முக்கிய விடயங்களுடன் பாதுகாப்பு ஒப்பந்தமும் கையெழுத்தானது. குறித்த ஒப்பந்தத்தின் பிரதியை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்த போதிலும், அதனைச் சமர்ப்பிக்க இந்தியாவின் ஒப்புதல் அவசியம் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்தின் இந்த இழுத்தடிப்பு எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதோடு, நாடாளுமன்றத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் இலங்கை விஜயமானது, மோடியின் வருகையின்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காகவா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றதும் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவிற்கே மேற்கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமரும் இலங்கைக்கு வருகை தந்தார். தற்போது இந்தியப் பாதுகாப்பு அமைச்சரும் இரு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கவுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் இந்த நெருக்கமான நகர்வுகள் சீனாவுக்குப் பெரும் தலைவலியாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் சீனாவின் உதவிகள் நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுவதற்கும், எதிர்காலத்தில் சீனாவுடன் இலங்கை அரசாங்கம் பாரிய விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதற்கும் சாத்தியமுண்டு.

தென்னிலங்கை அரசியல்வாதிகளும் பெரும்பான்மை இன மக்களும் இந்தியாவின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதை எப்போதும் முழுமையாக அங்கீகரிப்பதில்லை. அதற்கான வரலாற்றுப் பிரதிபலிப்புகளில் ஒன்றாகவே, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு வருகை தந்தபோது கடற்படை வீரர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிடலாம். சிங்களத் தரப்பு இந்தியாவின் பிரதிநிதிகள் மீது அவநம்பிக்கை கொள்வதற்கு இதற்குச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது. இத்தகைய பின்னணியில், இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விஜயத்தை தென்னிலங்கை அரசியல் களம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வி எழுகிறது.

மறுபுறம், இலங்கைத் தமிழர்களைத் தொப்புள்கொடி உறவுகள் என இந்தியாவின் மத்திய அரசாங்கம் கூறிக்கொண்டாலும், இலங்கையின் மத்திய அரசாத்துடன் இணைந்து தமிழர்களுக்குத் துரோகமே இழைக்கப்பட்டதாகத் தமிழ் தரப்பு கருதுகிறது. இலங்கையில் கால்பதித்த இந்தியாவின் அமைதிப்படையிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு நிராயுதபாணிகளாக நின்றபோது, எமது இனம் அடக்குமுறைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளானமை தமிழர்களின் வரலாற்றில் அழியாத வடுவாகப் பதிந்துள்ளது என்பதனை எவராலும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.

Post a Comment