சல்காது அரங்கம் மறுக்கப்பட்டாலும் அநுராதபுரத்தில் எமது போராட்டம் இடம்பெறும்: முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த

 

அநுராதபுரம் சல் காது அரங்கத்தில் எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணியை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

எனினும், அநுராதபுரத்தின் ஏதேனும் ஒரு இடத்தில் இப்போராட்டத்தை நடத்துவதை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று (2026.09.02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

"செப்டம்பர் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பில் அரசாங்கம் காட்டி வரும் தீவிரமான எதிர்வினைகள் குறித்து நேற்று நாங்கள் கேள்வி எழுப்பினோம். மக்களது பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் பிரதான அரசியல் சக்தியாகவே எதிர்க்கட்சி தொழிற்படுகின்றது.

கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்களின் குரலாகவே இந்த போராட்டத்தை அநுராதபுரத்தில் ஒருங்கிணைக்கிறோம். குறிப்பாக, அநுராதபுர மாவட்ட விவசாயிகளின் நிலைமை இன்று மோசமாக உள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான உரம் கிடைக்கவில்லை; வறட்சியான காலநிலையால் மக்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்குகின்றனர். இவ்வாறான பின்னணியில், அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்ப்பைக் காட்டவே நாங்கள் சல் காது அரங்கத்தை கோரினோம். ஆனால், அரசாங்கம் சட்டதிட்டங்களைச் சுட்டிக்காட்டி அந்த மைதானத்தை வழங்க மறுக்கிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் நாமல் ராஜபக்ஷவின் அரசியல் வளர்ச்சி குறித்து அரசாங்கத்திற்குப் பேரச்சம் ஏற்பட்டுள்ளது. இதனாலேயே எங்களை தினமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைத்து அடக்குமுறைகளைப் பிரயோகிக்க முயல்கிறது.

 அரங்கம் மறுக்கப்பட்டாலும் அநுராதபுரத்தின் ஏதேனும் ஒரு இடத்தில் எமது எதிர்ப்புப் பேரணி நிச்சயமாக நடைபெறும். விவசாயிகளுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பொதுஜன பெரமுன தொடர்ந்து குரல்கொடுக்கும்.

அதேபோன்று, 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு விடுக்கும் அச்சுறுத்தல் என சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீடிப்பது தொடர்பில் மக்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் நிலவும் போது, குறுக்கு வழியில் அரசாங்கம் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயல்வதையே மக்கள் எதிர்க்கின்றனர். எனவே, நாட்டின் உயர்ந்த நீதித்துறைக்கும் நீதிபதிகளுக்கும் களங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.

Post a Comment